இந்தியா

கோவா முதலமைச்சராக பாரிக்கர் நாளை பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பாரிக்கர் நாளை பதவியேற்பு

webteam

கோவாவில் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்கிறது.

முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் நாளை மாலை பதவியேற்கிறார்.

மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி, கோவா முன்னணி கட்சி மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து கோவாவில் ஆட்சியைத் தக்க வைக்கும் பாரதிய ஜனதாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா மற்றும் ஆதரவு தரும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கோவா ஆளுநரைச் சந்தித்த மனோகர் பாரிக்கர், ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று, ஆட்சியமைக்குமாறு பாரிக்கரை கேட்டுக் கொண்டுள்ள ஆளுநர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கெடு விதித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 13 இடங்களையும், மகாராஷ்ட்ர கோமன்டக் கட்சி 3 இடங்களையும், கோவா முன்னணிக் கட்சி 3 இடங்களையும் பெற்றுள்ளன. இவை தவிர சுயேச்சைகள் 2 பேர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, பாரதிய ஜனதாவிற்கு 21 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

இதேபோல், மணிப்பூரிலும் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா உரிமை கோரியுள்ளது.60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தமக்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், மணிப்பூரில் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் ‌கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரசும் ‌ஆட்சியமைக்க கோரியுள்ளது.