இந்தியா

மனோகர் பாரிக்கர் உடல் இன்று மாலை நல்லடக்கம்

webteam

கோவாவில் காலமான மனோகர் பாரிக்கர் உடல் இன்று மாலை 5 மணி அளவில், மிர்மர் பகுதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கடந்த அக்டோபர் மாதம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவர் ஒருவரின் துணையுடன் குறிப்பிட்ட தூரம் நடந்து சென்றார். பின்னர் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்த வந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். 

இந்நிலையில், மனோகர் பாரிகரின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு 8 மணியளவில் காலமானார். அவரின் மறைவுக்கு  பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், பாரிக்கரின் உடல் கோவாவில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கலா அகாடமி இடத்திற்கு 10:30 மணி அளவில் பாரிக்கர் உடல் கொண்டுச் செல்லப்படுகிறது. அங்கு 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 

இறுதியாக மாலை 5 மணி அளவில் மிர்மர் பகுதியில் உடல் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படுகிறது. பாரிக்கரின் மறைவை ஒட்டி கோவா மாநிலத்தில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய அளவில் இன்று துக்கம் அனுசரிக்கபடுகிறது.