இந்தியா

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதி..!

webteam

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர். 63 வயதான மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கணையம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். 

அப்போது  மனோகர் பாரிக்கரின் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட மனோகர் பாரிக்கர் ஒருவரின் துணையுடனே குறிப்பிட்ட தூரம் நடந்து சென்றார். இதனையடுத்து கோவாவில் உள்ள அவரது இல்லத்திலேயே ஓய்வெடுத்த வந்த அவர், பெரிய அளவில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு மீண்டும் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவா முதலமைச்சர் அலுவலகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சர் பாரிக்கர், குடல் இரப்பை எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காக கோவா மருத்துவ கல்லூரி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாரிக்கரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் 48 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.