ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக மனோகர் லார் கட்டார் இன்று பதவியேற்கிறார். ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமைகோரி பாரதிய ஜனதா - ஜனநாயக ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் சத்யதியோ நரைன் ஆர்யாவை சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக புதிய அரசு அமைக்க வரும்படி, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் முதலமைச்சராக இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு விழா இன்று மதியம் 2.15 மணிக்கு நடைபெறுகிறது.
புதிய முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்க உள்ளனர்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா 40 தொகுதிகளையும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களையும் கைப்பற்றின. இதுதவிர மேலும் ஏழு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.