இந்தியா

மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு ரத்து?

மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு ரத்து?

webteam

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு திரும்பி பெறபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் சிறப்பு பாதுகாப்பு படையின் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மத்திய உள்துறை அமைச்சகம், கேபினட் செயலகம் மற்றும் உளவுத்துறை ஆகியவை ஈடுபட்டது. மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு விளக்கி கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் உள்ள பாதுகாப்பு அச்சறுத்தலை ஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து இன்னும் அதிகாரபூர்வமான முடிவு வெளிவரவில்லை. எனினும் இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

1985ஆம் ஆண்டு இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது.  சிஆர்பிஎஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப் ஆகிய துணை ராணுவப்படைகளிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பாதுகாப்பு படையில் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 

இந்தியாவில் தற்போது சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனினும் கடந்த 2004ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விடைப் பெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, அவர் இறக்கும் வரை சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.