மதுபான ஊழல் தொடர்பான பொய் வழக்கில் வேண்டுமானால் என்னை கைது செய்யுங்கள், சி.பி.ஐ. அதிகாரிகளை விட்டு விடுங்கள் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்த நிலையில் புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டெல்லியில் மீண்டும் பழைய மதுபான கொள்கை அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் புயலை கிளப்பி உள்ள நிலையில், மணிஷ் ஷிசோடியா குறித்த ஸ்டிங் ஆப்ரேஷனை பா.ஜ.க. நடத்தி வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் ஊடகங்களுக்கு இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் வீடியோவை காண்பித்து பேட்டியளித்தார். அப்போது பேட்டியில் பேசுகையில், டெல்லியில் உள்ள மதுபான வர்த்தகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எவ்வளவு கமிஷன் கொடுத்துள்ளீர்கள் என்பது வீடியோவாக வந்துவிட்டது. இப்போது கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தப்பிக்க எந்த வழியும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபோது, எந்தவிதமான ஊழல் குறித்தும் மக்கள் ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தி வெளியிடுங்கள் எனத் தெரிவித்தார். அதுதான் உண்மையாகவே இப்போது நடந்துள்ளது என்றார்.
மேலும் மணீஷ் சிசோடியா வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. துணை சட்ட ஆலோசகர் டெல்லியில் தனது இல்லத்தில் வியாழன் அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது இந்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா. அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தற்கொலை செய்து கொண்ட சி.பி.ஐ. அதிகாரிக்கு என் மீது பொய்யான வழக்கு போட வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதற்கு அதிகாரிகளுக்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிகம் அழுத்தம் காரணமாக அவர்கள் விபரீத முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள் என்று கூறினார்.
மேலும் நான் இதை பிரதமர் நரேந்திர மோடி இடம் கேட்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷயத்தை கூற வேண்டும். ஆப்ரேஷன் தாமரை தான் மத்திய அரசின் ஒரே வேலையா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், என் மீது பொய் வழக்கு போட்டு வேண்டுமானால் என்னை கைது செய்யுங்கள். ஆனால் அதிகாரிகளை விட்டு விடுங்கள் என தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட வீடியோ தொடர்பாக பேசிய மணீஷ் சிசோடியா, இது ஒரு நகைச்சுவையான வீடியோ. இதுபோன்ற பல வீடியோக்கள் என்னிடம் உள்ளது. நானும் தருகிறேன் என தெரிவித்தார்.
-விக்னேஷ் முத்து.