மணிப்பூரில் தொடர்ந்து நீடித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில், விறகு சேகரிக்க சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 3 கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்லப்பட்டவர்களின் உடல்களை அம்மாநில முதலமைச்சர் இல்லத்திற்கு முன்பு கொண்டு சென்று, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. குறிப்பாக, குகி சமூக மக்கள் வாழ்ந்த ஒரு கிராமம் அழிக்கப்பட்டு, அச்சமூகத்தை சார்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூக ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.
இவ்வாறு, மணிப்பூரில் 2023-ம் ஆண்டு தொடங்கிய வன்முறையின்தாக்கம் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில் தான், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி (Kangpokpi) மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், இன்று காலை 7 மணியளவில் விறகு சேகரிக்க சென்ற 16 பேர் கொண்ட குழு மீது சந்தேகத்திற்குரிய ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில், 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையைக் கட்டுப்படுத்தக் கோரி, உயிரிழந்தவர்களில் இருவரின் உடல்களை மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங்கின் (Yumnam Khemchand Singh) இல்லத்தின் முன்பாகக் கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்ததுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (JNIMS) கொண்டு சென்றுள்ளனர்.
அதேசமயம், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, கடந்த சனிக்கிழமை கம்ஜோங் மாவட்டத்தில் குகி சமூகம் வாழும் கிராமத்தில் 15 வீடுகள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பலர், வனப்பகுதிகளுக்கும் அருகிலுள்ள ராணுவ முகாம்களுக்கும் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். எனினும், அடுத்த நாளே அடையாளம் தெரியாத அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அதே கிராமத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கும் மத்தியில் தான், இன்று நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பொதுமக்களின் கோபத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், இம்பாலின் பல பகுதிகளில் பொதுமக்களின் போராட்டங்களும், கடையடைப்பு சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.