manipur violence
manipur violence twitter
இந்தியா

மணிப்பூர்: காவல் நிலையங்களில் இருந்து திருடப்பட்ட 4,265 AK47 ரக துப்பாக்கிகள்! கள ஆய்வில் அதிர்ச்சி!

Prakash J

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்திருக்கும் மோதலுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. எனினும் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் தொடர்ந்து அங்கு துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்பதாகவும், வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

manipur violence

இதை, புதிய தலைமுறை செய்தியாளர்கள் பல இன்னல்களுக்கு இடையே அங்கு சென்று பல பிரத்யேக தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று காலைகூட, மேற்கு இம்பால் பகுதியில் மெய்டீஸ் மற்றும் குக்கி இனக்குழுவினருக்கு இடையே வன்முறை வெடித்ததாகத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி, துப்பாக்கிக் குண்டுகளின் சத்தத்தை அவர்கள் உணர முடிந்ததாகவும் தெரிவித்திருந்தனர். தொடர்ச்சியாக 14 மணி நேரமாக இருதரப்புக்கும் இடையே வன்முறை நீடித்து வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். அப்போது அங்கு பல இனக்குழுக்களின் கைகளிலும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் இருந்ததாக நமது செய்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதைக் காட்சிப்படுத்திய விவரங்களுடன், அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நமது புதிய தலைமுறை விவரம் கேட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் அளித்த பதில்தான் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் காவல் நிலையங்களிலிருந்து 4,265 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் திருடப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிகள்தான் அந்த இருதரப்பு இனக் குழுக்களிடையே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிகள் அவர்களுடைய கையில் இருப்பதுதான் தற்போது தொடரும் வன்முறைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது எனவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

ak 47 guns

ஏற்கெனவே ஆயுதங்கள், வெடிகுண்டுகளை எடுத்துச் சென்ற இனக் குழுவினர் அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், குழுக்கள் திரும்ப ஒப்படைத்ததாகத் தெரியவில்லை. எனினும் காவல் துறையினர், ராணுவ வீரர்கள் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்டு வருகின்றனர்.

மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுக்க ஒருவகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், மறுபுறம் காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிய அதிகாரிகள் இன்னும் போராடி வருகின்றனர். தவிர இதுகுறித்து ஆய்வு செய்தபோது, ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் படைகளுக்கு வழங்கப்பட்ட பதிவேடுகளைக்கூடக் காணவில்லை எனச் செய்திகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.