மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம் PTI
இந்தியா

“வன்முறைக்கு மாநில அரசே உடந்தை” - மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு!

Prakash J

மணிப்பூரில் பைரோன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் மெய்டீஸ் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் வன்முறை குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள சைகோட்டை தொகுதி பாஜக எம்எல்ஏ பவோலியன்லால் ஹொக்கிப் பேசியிருக்கும் ஒரு கருத்து, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குக்கி பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இவர் உள்பட 10 எம்.எல்.ஏக்கள் கடந்த மே மாதம் மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் குக்கி மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனி நிர்வாகம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் அது அம்மாநில அரசால் ஏற்கப்படவில்லை.

பிரேன் சிங், மணிப்பூர் கலவரம்

இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ. பவோலியன்லால் ஹொக்கிப், வன்முறை குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர், “மணிப்பூரில் இனக்குழுக்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடங்கிய பிறகு அதனை போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையாக சித்தரிக்க முதல்வர் முயன்றார். இதன்மூலம் மணிப்பூர் வன்முறைக்கு முதல்வர் மறைமுகமாக ஆதரவாக இருப்பது தெளிவாகத் தெரியும். மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.

மேலும் மணிப்பூரில் வசிக்கும் குக்கி இன மக்களைப் போதைப்பொருள் கும்பல் என சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது. தற்போதைய சூழலில் பழங்குடியினரின் நிலத்தை உரிமை கொண்டாடும் போராக இதனை பார்க்க வேண்டும். நாங்கள் பிரதமர் மோடியை சந்திக்க முயற்சித்து வருகிறோம். ஏனென்றால் வன்முறையை மத்திய அரசால்தான் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.