Mangka Mayanglambam performs at Jodhpur RIFF PTI
இந்தியா

3 ஆண்டு வன்முறையில் மணிப்பூர்.. இசையை ஆயுதமாக்கும் கலைஞர்.. யார் இந்த மங்கா மயங்லம்பம்?

30 வயதான மங்கா, மணிப்பூரின் பாரம்பரிய இசைக்கருவியான ‘பெனா’வை இசைத்து, தனது மக்களின் துயரங்களையும் அம்மாநிலத்தின் கலாசாரத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறார்.

Premkumar S

மணிப்பூரில் 2023 மே மாதம் முதல் மெய்தி மற்றும் குகி சமூகத்தினரிடையே இன மோதல்கள் நீடித்து வருகின்றன. இந்த மோதல்களில் குறைந்தது 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வன்முறை, சாதாரண மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்தச்சூழலில் தான், மணிப்பூரின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான பெனா கலைஞர் மயங்லம்பம் மங்கா, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற ராஜஸ்தான் சர்வதேச நாட்டுப்புற இசைத் திருவிழாவில் பங்கேற்றார். அப்போது, வன்முறை குறித்து தான் கடந்த 2024-ம் ஆண்டு தான் எழுதிய , ‘அபோகலிப்ஸ்: தி கால் ஆஃப் மதர் நேச்சர்’ என்ற பாடலை பாடி இசையமைத்து கவனம் பெற்றுள்ளார்.

Mangka Mayanglambam

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மனிதர்களிடையே அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் போனால், மனித நாகரிகமே அழிவைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும் அந்தப் பாடலை, கொரோனா காலக்கட்டத்தின் போது தொடங்கிங்கினேன். ஆனால், இரண்டு பத்திகளுக்கு மேல் அந்தப் பாடலைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் தான், 2023-ஆம் ஆண்டு மணிப்பூரில் வெடித்த இன மோதல்களும், அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும் என்னை ஆழமாகப் பாதித்தன. இதையடுத்து, சுமார் நான்கு ஆண்டுகளாக முழுமையடையாமல் இருந்த அந்தப் பாடலை எழுதி முடித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தனது இசைப் பயணம் குறித்துப் பேசும் மங்கா, மணிப்பூரின் பாடல்களும் கதைகளும் தற்போது முற்றிலும் மாறிவிட்டதாகக் கூறுகிறார். காதல், அமைதி, ஒற்றுமை குறித்துப் பாடும்போதுகூட, வன்முறையால் ஏற்பட்ட துயரமான நினைவுகள் தன்னை ஆட்கொள்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

பெனா

மங்கா இசைக்கும் ‘பெனா’ என்பது ஒரே ஒரு நரம்பைக் கொண்ட பாரம்பரிய இசைக்கருவியாகும். ஒரு காலத்தில் மணிப்பூர் அரச குடும்பங்களின் அரண்மனைகளில் இசைக்கப்பட்ட இந்தக் கருவி, பாரம்பரியமாக ஆண்களால் மட்டுமே அதிகம் இசைக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த இசைக்கருவியை இசைக்கும் கடைசி தலைமுறைக் கலைஞர்களில் ஒருவராக மங்கா திகழ்கிறார்.