இந்தியா

மங்களூரு மசூதிக்குள் கோயில் போன்ற அமைப்பா? பதற்றத்தால் 144 தடை அமல்

ஜா. ஜாக்சன் சிங்

மங்களூருவில் உள்ள ஒரு மசூதிக்குள் கோயில் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டதாக வெளியான தகவலால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள மலாலி பகுதியில் ஜும்மா மஸ்ஜித் என்ற பெயரில் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியை புனரமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அந்த மசூதிக்கு உள்ளே இந்து கோயிலை போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து, அந்த மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக மலாலியில் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தக்ஷின் கன்னடா துணை ஆணையர் கே.வி. ராஜேந்திரா கூறுகையில், "மசூதிக்குள் கோயில் போன்ற அமைப்பு இருந்ததாக கூறப்படும் விஷயத்தின் உண்மைத் தன்மையை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இதில் விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் எந்தவித மாற்றமும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளோம். விசாரணை முடியும் வரை மக்கள் உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். அனைவரும் அமைதியை பேண வேண்டும்" என்றார்.

முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.