பள்ளிகளில் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க உதவியாளர், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பெண்களை நியமிக்க குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி திட்டமிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி உதவியாளர் கைது செய்யப்பட்டார். இந்த 2 சம்பவங்களும் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தின. இந்நிலையில் பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் சி.பி.எஸ்.இ நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, பள்ளியின் உதவியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆகிய பணிகளில் பெண்களை அமர்த்த வேண்டும் என்று மேனகா காந்தி கேட்டுக்கொண்டார். அத்துடன் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர் அளித்த கடிதத்தில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளிலும், மாணவர்களுக்கும் பாதுகாப்பை அதிகாரிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முழுநேர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், பெற்றோர்களும் குழந்தைகளின் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பிரச்னைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரியவந்தால் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு புகார் எண்ணான 1098 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்றும் மேனகா காந்தி கேட்டுக்கொண்டார்.