செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
உலகின் முக்கியமான Fintech மாநாடுகளில் ஒன்றாக கருதப்படும் Global Fintech Fest என்ற நிகழ்ச்சியை, மகாராஷ்டிரார் மாநிலம், மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாசார மையத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக, இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒருவர் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்ததை போலீசார் கவனித்தனர். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவருடன் வந்திருந்த அவருடைய பாதுகாவலரிடம் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் மும்பை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட 24 வயதான ரோஹன் பரேக், தாம் பிரதமர் அலுவலகமான PMO-வில் அதிகாரியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவர் வைத்திருந்த PMO அடையாள அட்டை போலியானது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதனால் பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. துப்பாக்கியுடன் போலி அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு இருவரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் வந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களின் செல்போன்கள், அடையாள ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களும் சோதனை செய்யப்படுகின்றன.
விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.