இந்தியா

5 பிள்ளைகள் இருந்தும் ரூ.1.5 கோடி சொத்துக்களை உ.பி அரசுக்கு உயில் எழுதிய முதியவர்! காரணம்?

நிவேதா ஜெகராஜா

உத்தரபிரதேசத்தில் 85 வயது முதியவர் ஒருவர், தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்து, தனது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை உத்தரபிரதேச அரசுக்கு உயில் எழுதிவைத்துள்ளார். மேலும் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். உயிலில், தனது மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறாராம்.

உ.பி.யின் முஃபார் நகரை சேர்ந்த நது சிங் என்பவர், ரூ.1.5 கோடி பெருமானமுள்ள வீடும் நிலமும் சொந்தமாக வைத்திருந்திருக்கிறார். இவருக்கு ஒரு மகனும் நான்கு மகள்களும் உள்ள நிலையில், மகன் ஆசிரியராகவும் மகள்கள் அனைவரும் திருமணமாகி கணவருடனும் வசித்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது. நது சிங்கின் மனைவி இறப்புக்குப்பின், அவர் தனியே நாட்களை கடந்து வந்திருக்கிறார். இந்நிலையில் மனைவி மறைவுக்குப்பின் தன்னை கவனித்துக்கொள்ள யாருமில்லை என்பதை உணர்ந்த அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, அவரேவும் சென்று முதியோர் இல்லமொன்றில் சேர்ந்திருக்கிறார்.

தந்தை என்ன ஆனார், எப்படி இருக்கிறார் என்பதை அறிய கூட நது சிங்கின் பிள்ளைகள் யாரும் செல்லாமல் இருந்துள்ளனர். தன்னுடைய பெரிய குடும்பத்தில், ஒருவர்கூட தன்னை பார்க்க வரவில்லை என்ற ஏக்கத்தில் மனமுடைந்து போயுள்ளார். இதனால், தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் உ.பி அரசுக்கு எழுதி வைத்த நது சிங், தனது சொத்தில் வரும் பணத்தை வைத்து, தன் மரணத்துக்குப்பின் பள்ளியோ மருத்துவமனையோ அரசு கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுபற்றி ஆங்கில ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “இந்த வயதில், நான் என் மகன் மருமகளோடுதான் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் என்னை சரியாக நடத்தவில்லை. அதனால் நான் என் மனதை மாற்றிக்கொண்டு, சொத்தையெல்லாம் அரசுக்கு எழுதிவைத்துவிட்டேன்” என பேசியிருக்கிறார். மேலும் மரணத்துக்குப்பின் தன் உடலையும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்புக்காக ஆய்வு செய்ய அனுமதி கொடுத்துள்ளாராம் நது சிங்.

இந்த உயிலை பதிவிட்டுக்கொண்ட அப்பகுதியின் துணைப் பதிவாளர், நது சிங்கின் பிரமாணப் பத்திரம் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அது செயல்படுத்தப்படும் என்றும் கூறியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இப்போதும்கூட அவரது குடும்பத்தார் யாரும் அவரை சென்று பார்க்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.