இந்தியா

அபார்ட்மெண்டில் கஞ்சா வளர்த்த அதிமேதாவி

அபார்ட்மெண்டில் கஞ்சா வளர்த்த அதிமேதாவி

webteam

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அபார்மெண்ட்டில் கஞ்சா செடி வளர்த்த முன்னாள் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சையது சாஹெத் ஹுசைன் என்னும் நபர் அமெரிக்காவில் உள்ள தனது நண்பர்களிடம் வீடியோ மூலம் யோசனைகளைப் பெற்று கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில், கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மனிகொண்டாவில் உள்ள பிரண்ட்ஸ் காலனி பகுதியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த ஹுசைன், சுமார் 40 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் வங்கி ஊழியரான அவர், எல்ஈடி விளக்குகளின் வெளிச்சத்தில் பூந்தொட்டிகளில் வைத்து வளர்த்து வந்த கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா செடிகள் வளர்வதற்குத் தேவையான வெப்ப நிலையைப் பராமரிக்க குளிர்சாதனம் மற்றும் டேபிள் பேன் வைத்திருந்ததாகவும் ஹைதராபாத் சிறப்புப் படை போலீசார் கூறியுள்ளனர். சிறுவயது முதலே கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான ஹுசைன், கஞ்சா விற்பனையாளராகவும் இருந்துள்ளார். விசாகப்பட்டினம் பகுதியில் இருந்து கஞ்சாவை கிலோ ரூ.4,500-க்கு வாங்கி ஹைதராபாத்தில் ரூ.16,000 வரை விற்பனை செய்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரே உற்பத்தியாளராகியிருக்கிறார்.