நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர்-ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. ராஞ்சி வழியாகச் செல்லும் இந்த விமானம் வழக்கம் போல் நேற்று இரவு 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பியது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, 24-ஏ இருக்கையில் அமர்ந்திருந்த அப்தாப் அகமது என்ற 32 வயது இளைஞர், விமானத்தின் அவசரக் கால கதவைத் திறக்க முயன்றார். இதைக் கண்ட மற்ற பயணிகளும் விமான சிப்பந்திகளும் அதிர்ச்சியடைந்தனர். கதவைத் திறக்க முயன்ற அந்த இளைஞரை பிடித்து இழுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து விமானி ராஞ்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விமான நிலையத்தில் போலீசார் தயாராக இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் அகமதுவை போலீசிடம் ஒப்படைத்தனர். அகமது, ராஞ்சியை சேர்ந்தவர். எதற்காக நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.