இந்தியா

கர்நாடகா: மகனுக்கு மாத்திரை வாங்க 300 கி.மீ சைக்கிளில் பயணம் செய்த தந்தை

Sinekadhara

நரம்பு பிரச்னையால் அவதிப்படும் மகனுக்கு மாத்திரை வாங்குவதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த தந்தை 300 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளிலேயே சென்று வந்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மைசூரு அருகே டி.நரசிபுரா கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் ஆனந்த் என்பவரது 10 வயது மகன் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிபட்டு வருகிறார். இரு மாதங்களுக்கு ஒருமுறை பெங்களூருவில் உள்ள நிம்ஹன்ஸ் மருத்துவமனைக்கு மகனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். மாத்திரையும் ஒரு நாள்கூட தவறக்கூடாது. இந்தச் சூழலில் முழு முடக்கத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெங்களூரு செல்லமுடியாமல் தவித்தார் ஆனந்த்.

இறுதியாக சைக்கிளில் செல்ல முடிவெடுத்த ஆனந்த், காவல்துறை கெடுபிடிக்கு பயந்து மக்கள் அதிகம் பயன்படுத்தாத கனகபுரா பாதை வழியாக 2 நாட்கள் பயணப்பட்டு பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றார். கிராமத்தில் இருந்து சைக்கிளிலேயே ஆனந்த் வந்திருப்பதை அறிந்து நெகிழ்ச்சி அடைந்த மருத்துவர்கள் அவரது மகனுக்கு தேவையான மாத்திரைகளையும், வழிச் செலவுக்காக ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பினர். அதை பெற்றுக்கொண்டு அடுத்த இரு நாட்களில் வீடு வந்து சேர்ந்தார். ஒருநாள் கூட சிகிச்சை தவறாத வகையில் 300 கிலோ மீட்டர் பயணித்து மகனுக்கு மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.