ஆழ்துளை பைப்புக்குள் விழுந்த நகராட்சி ஊழியர் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்தார் பிரணகுருஷ்ணா முடுலி. இவர் அங்குள்ள நீரேற்று நிலையத்தில் ஊழியராகப் பணியாற்று கிறார். வழக்கம் போல நேற்றும் பணிக்கு சென்றார். தண்ணீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் அதை சரி செய்யுமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அதைச் சரி செய்ய சென்றார். அப்போது திடீரென்று தடுமாறி இரண்டரை அடி அகல குழாய்க்குள் விழுந்துவிட்டார். விழுந்ததுமே 25 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டார்.
இதைக் கண்டதும் அவருடன் பணியாற்றியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் சொல்லிவிட்டு அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அது எளிதானது அல்ல என்பதால், ஒடிசா மாநில பேரிடர் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, முடுலியிடம் தைரியமாக இருக்கும்படி சக தொழிலாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்து வந்தனர். பின்னர் விரைந்து வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் குழாய்க்குள் ஆக்ஸிஜனை செலுத்தினர். அதற்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அக்கம் பக்கத்து மக்களும் அங்கு திரண்டனர்.
முடுலி விழுந்த குழாய்க்கு அருகில் பெரும் குழிதோண்டி அவரை உயிருடன் மீட்டனர். இந்த மீட்புப் போராட்டத்துக்கு 7 மணிநேரம் ஆனது. மீட்புக்குழுவுக்கு முடுலியும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கட்டாக்கில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.