கர்ப்பிணி மனைவியை கேரவன் ஏற்பாடு செய்த 4000கிமீ தூரம் கடந்து தனது வீட்டிற்கு கணவர் அழைத்து வந்துள்ளார்.
கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுப்போக்குவரத்தும் இல்லை. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நடிகர் ராஜன் பி தேவின் மகன் ஜூபில் ராஜன் தன் மனைவியை கேரவன் ஏற்பாடு செய்து குஜராத்தில் இருந்து கேரளாவிற்கு அழைத்து வந்துள்ளார்.
குஜராத்தில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்குச் சென்ற ஜூபிலின் மனைவி ஊரடங்கால் அங்கேயே சிக்கிக் கொண்டார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு குஜராத்திலேயே பிரசவம் பார்த்துவிடலாம் என அனைவரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் குஜராத்தில் கொரோனா கடுமையாக பரவி வரும் சூழலில் குஜராத்தைவிட்டு கேரளா சென்றுவிடலாம் என திட்டத்தை மாற்றியுள்ளனர். ஆனால் கர்ப்பிணியை 4000 கிமீ எப்படி அழைத்து வருவது? காரும் பாதுகாப்பு இல்லை என்பதால் சினிமா படப்பிடிப்பில் கேரவன் ஏற்பாடு செய்துள்ளார் ஜூபில்.
பல இடங்களில் போராடி ஒரு வழியாக படுக்கை, கழிப்பறை, சமையல் செய்ய இடம் என சகல வசதிகளுடன் கேரவன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். தனது நண்பருடன் கேரளாவில் இருந்து கேரவனில் புறப்பட்ட ஜூபில் பல இடங்களில் போலீசார் சோதனையைத் தாண்டி குஜராத் சென்றுள்ளார். மீண்டும் குஜராத்தில் இருந்து தன் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் கேரளாவுக்கு பத்திரமாக வந்துள்ளனர்.
இந்த நீண்ட பயணம் குறித்து தெரிவித்துள்ள ஜீப்லி, இந்த பயணத்தில் பல இடர்பாடுகள் வந்தன. கேரவன் பழுதானது. புனே-மும்பை நெடுஞ்சாலையில் சிறு விபத்து ஏற்பட்டு அங்குள்ள மக்களிடம் பிரச்னை எழுந்தது. எங்களிடம் பணம் பறிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். நாங்கள் ஏழை ஓட்டுநர்கள் என்றும் சாப்பிடக்கூட பணம் இல்லை என்றும் நடித்து தப்பினோம். ஆனாலும் அங்குள்ள சில இளைஞர்கள் எங்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.
அவர்கள் அன்பில் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. மக்களின் மனதில் உதவும் மனப்பான்மையும் இரக்கமும் அப்படியே இருக்கிறது. எதிர்காலத்தில் எனக்கு குழந்தை பிறந்தால் இந்தியாவின் பல நல்ல மனிதர்கள் உனக்கு உதவினார்கள் எனக் கூறுவேன். அவர்களுக்கு நன்றி சொல்ல சொல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.