இந்தியா

ம.பியில் பஞ்சு திருடிய நபருக்கு நேர்ந்த சித்ரவதை - 7 பேர் மீது வழக்குப்பதிவு

Sinekadhara

பஞ்சு திருடிய குற்றத்திற்காக ஒரு நபரை கம்பத்தில் கட்டிவைத்து ஆடைகளை கிழித்து, அடித்து தாக்கிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நூர் சிங் என்ற நபர் தனது வயலில் விளைந்த பஞ்சை திருடிவிட்டதாக சகாராம் என்ற விவசாயி குற்றஞ்சாட்டினார். அதன்பேரில், சகாராமின் இரு மகன்களான நஹார் சிங் மற்றும் காஷிராம் இருவரும் நூர் சிங்கை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அவருடைய ஆடைகளையும் கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர். பின்னர் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து கார்கோர் போலீசார் கூறுகையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து 10 கிலோ பஞ்சு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த குற்றவாளியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் உன்னா காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே இருதரப்பினரும் புகாரளித்துள்ளதாகவும் அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத் துவக்கத்தில் இந்தூரில் ஒரு பூசாரி 'சத்தியநாராயண பூஜை'யின் போது அவர் செய்த சடங்குகள் தவறான முடிவுகளை விளைவித்ததாக சந்தேகத்தின்பேரில் அவரது புரவலர்களால் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.