இந்தியா

பட்டியலினத்தவருடன் காதல்! 17 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!

ச. முத்துகிருஷ்ணன்

கர்நாடகாவில் பட்டியனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 17 வயது மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக் கொலை வழக்கில், கர்நாடகாவின் மைசூருவின் பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ககுண்டி கிராமத்தில் தனது 17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியபட்னாவில் உள்ள கல்லூரியில் இரண்டாம் பியூசி படிக்கும் மாணவியான ஷாலினி பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமத்தில் உள்ள பட்டியனத்தை சேர்ந்த ஒரு இளைஞனை அவள் காதலித்து வந்துள்ளாள். அவளுடைய குடும்பம் இந்த காதலை கடுமையாக எதிர்த்துள்ளது. அந்த இளைஞருடன் தொடர்பு கொள்வதை நிறுத்தும்படி பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமி தனது பெற்றோருக்கு எதிராக புகார் அளித்ததையடுத்து, மைசூருவில் உள்ள அரசு பெண்கள் இல்லத்திற்கு பெரியபட்டணா போலீசார் அனுப்பி வைத்தனர். இருப்பினும், பெற்றோர், பதினைந்து நாட்களுக்கு முன்பு, மைசூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் (CWC) அவளைத் துன்புறுத்த மாட்டோம் என்றும், அவளது கல்விக்கு உதவுவோம் என்றும் உறுதியளித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அவளை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு, அவரது தந்தை சுரேஷ், 45, மற்றும் தாய் பேபி உட்பட குடும்பத்தினர், சிறுவனுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சிறுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவள் மீண்டும் இளைஞனை தொடர்பு கொள்ள முயன்றபோது, செவ்வாய்கிழமை அதிகாலையில் சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அதிகாலை 2.30-3.00 மணியளவில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர், அவரது உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற பெற்றோர், பக்கத்து மேலஹள்ளி கிராமத்துக்குச் சென்று, சடலத்தை சாலையோரம் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். பின்னர், சுரேஷ் பெரியபட்டணா காவல் நிலையத்துக்குச் சென்று போலீஸில் சரணடைந்தார். போலீசார் சுரேஷ் மற்றும் அவரது மனைவி பேபியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூரு எஸ்பி சேத்தன் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சிறுமி பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர், இளைஞர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.” என்று தெரிவித்தார். இதற்கிடையில், சிறுமி ஆரம்பத்தில் பெற்றோருடன் செல்ல தயங்கினார் என்றும் ஆனால், பின்னர் பெற்றோர் உறுதியளித்ததையடுத்து அவர்களுடன் வீடு திரும்ப ஒப்புக்கொண்டதவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சிறுமி வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் மைசூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன.