இந்தியா

விலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..!

விலைக்கு வாங்கப்பட்ட பாம்பு.. நெடுநாள் திட்டம்.. அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த கொலை..!

webteam

மனைவியை கொன்றுவிட்டு, பாம்பு கடித்ததாக நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அமிதேஷ் பட்டாரியா(36). இவரது மனைவி சிவானி(35). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிவானி தனது வீட்டில் பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். எனினும் காவல்துறை விசாரணையில் அமிதேஷ் தனது மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி அனில் சிங், “அமிதேஷ் என்ற நபர் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு தனது மனைவியை பாம்பு கடித்துவிட்டதாக மருத்துவமனையில் வந்து சேர்த்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது மனைவிக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் பாம்பு கடித்து இறக்கவில்லை என்று தெரியவந்தது. அவர் மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவித்தது. 

இதனையடுத்து நாங்கள் அமிதேஷை அழைத்து விசாரணை நடத்தினோம். இந்த விசாரணையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அமிதேஷ் மற்றும் அவரது மனைவி சிவானி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால்  மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக  பாம்பு ஒன்றை 11 நாட்களுக்கு முன்பு வாங்கி வீட்டில் வைத்துள்ளார். அத்துடன் இந்தக் கொலை தொடர்பாக அவரது தந்தை ஓம்பிரகாஷ் மற்றும் சகோதரி ரிச்சா சதுர்வேதி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் கொலை சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். 

இதனால் வீட்டில் தனியாக இருந்த சிவானியை தலையணையை வைத்து நெரித்து அமிதேஷ் கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு தான் வாங்கி வைத்திருந்த பாம்பின் பல்லை சிவானியின் கையில் பதிய வைத்துள்ளார். அதன்பின்னர் தனது மனைவியை பாம்பு கடித்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் நாடகம் ஆடியுள்ளார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அமிதேஷ் மற்றும் அவரது தந்தை, சகோதரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.