முகநூல் மற்றும் இன்ஸ்டா ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் ரீல்ஸ் போட்டு லைக்ஸ்களை அள்ளும் பழக்கம், இன்றைய தலைமுறையிடம் அதிகரித்து வருகிறது. அதற்காக, அவர்கள் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நெடுஞ்சாலையில் தீ வைத்து ரீல்ஸ் எடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃபதேபூர் தேசிய நெடுஞ்சாலை-2வில் ஒரு கார் முன்பு நின்றுகொண்டு வாலிபர் ஒருவர் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தீ முன்பு நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கண்டித்து பதிவிட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது பெயர் ஷேக் பிலால் என தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.