இந்தியா

தாய்மாமனால் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமான பெண் : ஏற்க மறுக்கும் கணவன்

webteam

தாய்மாமனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாக இருக்கும் மனைவியை ஏற்க முடியாது என கணவன் தெரிவித்துள்ள சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த அப்பெண், தாய்வழி தாத்தாவின் வீட்டீல் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு புர்னே மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை அவரது தாத்தா திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக அப்பெண் தனது தாத்தாவின் வீட்டில் இருந்துள்ளார். அவர் அங்கு வந்த சில நாட்களில் இருந்தே, அப்பெண்ணின் தாய் மாமன் அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

அத்துடன் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் வந்துள்ளார். இதையடுத்து அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் அப்பெண் உள்ளூர் காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அப்பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அத்துடன் வயதிற்கு வந்த நாளில் இருந்தே அப்பெண்ணுடன் தாய் மாமன் உறவில் இருந்திருக்கிலாம் எனக் கூறி தற்போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். மேலும், தாய்மாமனால் கர்ப்பம் ஆகியிருப்பதை குறிப்பிட்டு ஏற்க முடியாது எனவும் கணவன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து சமரசம் செய்ய தாத்தா பேசியிருக்கிறார். ஆனால் எந்தப் பணமும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக போலீஸாரிடம் தாய்மாமனும், அவரது தந்தையும் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. கணவன் ஏற்க மறுத்த அந்த அப்பாவி பெண் தற்போது தனது தாய் மாமன் வீட்டில் 8 மாத கர்ப்பிணியாக தங்கியிருக்கிறார். தாய்மாமன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.