இந்தியா

”6 நாள பாதியா பிரிச்சுக்கலாம்; சண்டே மட்டும்..” - 2 மனைவிகளின் Code Word ஒப்பந்தம்..!

JananiGovindhan

முதல் மனைவிக்கு தெரியாமல் உடன் பணிபுரிந்த பெண்ணையே திருமணம் செய்து வாழ்ந்து வந்த கணவனின் லீலையை அறிந்த பெண் ஜீவனாம்சம் கேட்ட நிலையில், புதுவிதமான ஒப்பந்தம் ஒன்றை போட்டிருக்கும் நிகழ்வு மத்திய பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.

அப்படி என்ன புதுமையான ஒப்பந்தம் போடப்பட்டது? அதன் விவரம் என்ன? என்பதை காணலாம்.

கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி, மத்திய பிரதேசத்தின் குவாலியல் குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஹரிஷ் தீவான் என்ற வழக்கறிஞரை இந்த விவகாரத்தில் ஆலோசகராக கடந்த ஜனவரியன்று நியமித்திருக்கிறது நீதிமன்றம். இதனையடுத்துதான் நடந்த அனைத்து நிகழ்வுகளும் அம்பலமாகியிருக்கிறது.

அதாவது, கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தன்று மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கு சாஃப்ட்வேர் இன்ஜினியருடன் திருமணமாகியிருக்கிறது. குருகிராமில் உள்ள நிறுவனத்தில்தான் இருவரும் இணைந்து இரண்டு ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறார்கள்.

திருமணமான பிறகு 2020ம் ஆண்டு வரை ஒன்றாக பணியாற்றிய நிலையில், அந்த பெண் கருவுற்ற நேரத்தில் கொரோனா பரவலும் தொடங்கியதால் அப்போது வேலையை விட்டுவிட்டு குவாலியருக்கே சென்றிருக்கிறார். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதியிருந்ததால் பெண்ணுடன் கணவரும் சென்றிருக்கிறார்.

இருவருக்கும் மகன் பிறந்த பிறகு, சில நாட்கள் கழித்து அந்த கணவர் மீண்டும் குருகிராமிற்கு வேலைக்காக சென்றிருக்கிறார். ஆனால் மீண்டும் குவாலியருக்கு திரும்பாமல் இருந்ததோடு மனைவியையும் புறக்கணித்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஏன் பேசுவதே இல்லை என தெரிந்துகொள்ள குவாலியரில் இருந்து குருகிராமிற்கு சென்று பார்த்த போதுதான் தனது கணவருக்கு அங்கு வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் மற்றொரு குடும்பமே இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.

இதனால் கடுமையான அதிர்ச்சிக்கும், ஆத்திரத்துக்கும் ஆளான முதல் மனைவி, குவாலியல் நீதிமன்றத்தில் தனது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையிட்டிருக்கிறார். இதனிடையே குருகிராமில் தங்கிய அந்த 28 வயது கணவர் உடன் பணியாற்றிய பெண்ணுடன் பழகி அவருடன் வாழ்ந்தும் வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில்தான் குவாலியர் நீதிமன்றம் ஆலோசகரை நியமித்திருக்கிறது.

ஆனால் முதல் மனைவிக்கு கணவரை ஜெயிலுக்கு அனுப்புவதற்கும் மனமில்லாமல், ஜீவனாம்சமாக கேட்காமல் புது விதமான ஒப்பந்தமாக ஒன்றை போடும்படி கூறியிருக்கிறார். அதன்படி, வாரத்தில் திங்கள் முதல் புதன் வரை முதல் மனைவியுடனும், வியாழன் முதல் சனி வரை இரண்டாவது மனைவியுடனும் வசிக்க வேண்டும் என்றும், ஞாயிறன்று மட்டும் அந்த கணவருக்கு எங்கு இருக்க வேண்டும் என்று விருப்பமோ அங்கு இருந்துகொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இதுபோக கணவனுக்கு வரும் 1.5 லட்சம் சம்பளத்தை சரிபாதியாக இரு மனைவிகளின் குடும்பத்துக்கும் மாதாமாதம் பிரித்து கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டதோடு, கணவர் பெயரில் இருக்கும் இரண்டு ஃபிளாட்களை தலா ஒன்றை இரு மனைவிகளுக்கும் எழுதி தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த ஒப்பந்தத்தை மீறும் பட்சத்தில் முதல் மனைவி கட்டாயம் நீதிமன்றத்தை நாடி சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என்றும் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஆலோசகரான வழக்கறிஞர் தீவான் கூறியிருக்கிறார்.