இந்தியா

வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாமா -அழுத சிறுமிக்கு 100ரூபாயும் சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்த அவலம்

Sinekadhara

பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறு குழந்தைகள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களாலேயே பெரும்பாலான குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்றதொரு சம்பவம் அசாமில் அரங்கேறியிருக்கிறது. தனது உறவினர் சகோதரியின் 11 வயது மகளை 31 வயது ஆண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், அவர் கையில் ரூ.100 பணமும், சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய அவலம் நடந்துள்ளது.

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்திலுள்ள தாம்ராத் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது உறவின் முறையான சகோதரன் ஒருவர் தனது 11 வயது மகளை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் வீட்டிலிருந்து சிறுமி அழுதுகொண்டே வந்ததாகவும், தனக்கு நடந்தவற்றை தன்னிடம் அழுதுகொண்டே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிலும் கொடுமை என்னவென்றால் அழுத சிறுமியின் கையில் ரூ.100 பணமும் சிப்ஸ் பாக்கெட்டும் கொடுத்து அனுப்பியதாகவும் கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாயாரும் சில உறவினர்களும் அந்த நபரின் வீட்டிற்குச் சென்று தட்டிக்கேட்டபோது, இதுகுறித்து புகாரளித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த நபரின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துப்ரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் 31 வயதான அந்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது. மேலும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. மேலும் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை குறைக்க தகுதியானவர் அல்ல என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து குற்றம் செய்த நபர் தான் செய்த தவறை உணரவேண்டும் என்றும், மனித வாழ்வின் கண்ணியத்தை சிறைநாட்களில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.