தாய் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்பதற்காக ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய இளைஞருக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது
மனிஷ் அரோரா என்பவர் தன் தாயுடன் டெல்லி -போபால் ஷடாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் மாதுரா ரயில் நிலையத்தில் ரயில் நின்றுள்ளது. அப்போது மனிஷும் அவரது தாயாரும் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளனர். ஆனால் தாய் சாப்பிடுவதற்குள் ரயில் புறப்பட தொடங்கியுள்ளது.
உடனடியாக ரயிலில் உள்ள சங்கிலியை இழுத்து நிறுத்திய மனிஷ் ரயிலின் புறப்படுவதை 30 நிமிடங்கள் தாமப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ரயிலை நிறுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் தெரிவித்த ரயில் நிலைய அதிகாரி, ''C8 கோச்சில் பயணம் செய்த பயணி தன் தாய் சாப்பிட வேண்டுமென்பதற்காக ரயிலை நிறுத்தியுள்ளார். இதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார். மனிஷ் அரோரா குறிப்பிட்ட நாளில் ரயில்வே நீதிமன்றம் முன்பு ஆஜராகி அபராதம் செலுத்த வேண்டுமென்றும், அபராதம் செலுத்த தவறினால் சிறைக்கு செல்ல நேரிடும்'' என்று தெரிவித்துள்ளார்