இந்தியா

’விமானத்தில் தீவிரவாதி’: ஸ்டேட்டஸ் போட்ட வாலிபரிடம் விசாரணை!

’விமானத்தில் தீவிரவாதி’: ஸ்டேட்டஸ் போட்ட வாலிபரிடம் விசாரணை!

webteam

விமானத்துக்குள் தீவிரவாதி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வாலிபர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அதில், யோக் வேதன் போடார் என்ற வாலிபரும் இருந்தார். அவர் இருக்கையில் அமர்ந்ததும் தனது முகத்தை கர்சிப்பால் மூடினார். பின்னர் தன்னை செல்ஃபி எடுத்தார். அதை, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘விமானத்துக்குள் தீவிரவாதி. பெண்களின் இதயங்களை அழிக்கப் போகிறேன்’ என்று கேப்ஷன் பதிவிட்டிருந்தார். 

கடந்த 10 வருடத்துக்கு முன், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் நினைவு தினம் இன்று என்பதால், அந்த வாலிபரின் பதி வை கண்டு அருகில் இருந்த பயணிகள் திடுக்கிட்டனர். உடனடியாக, விமானப் பணியாளர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர். விமானி பணிப் பெண்கள், அவரிடம் மொபைல் போனை கேட்டனர். அவர் தர மறுத்துவிட்டார்.

இந்த தகவல் விமானிக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு விமானத்தை நிறுத்தும் இடத்துக்கு திருப்பினார். இதையடுத்து அந்த வாலிபரை தொழிற்பாதுகாப்புப்படை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கிழக்கு கொல்கத்தாவில் உள்ள பெலியகாட்டா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

நண்பர்களை ஏமாற்றவும் சீண்டவும் இந்த குறுப்புத் தனமான செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.