இந்தியா

"பெண்களின் துணிகளை 6 மாதம் துவைக்க வேண்டும்" - பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு நூதன தண்டனை

"பெண்களின் துணிகளை 6 மாதம் துவைக்க வேண்டும்" - பாலியல் வழக்கில் சிக்கியவருக்கு நூதன தண்டனை

jagadeesh

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நபருக்கு பெண்களின் துணிகளை 6 மாதங்கள் துவைக்க நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலம் மஜ்ஹோர் கிராமத்தைச் சேர்ந்தவர் லலன் குமார் (20). இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இருக்கிறது. இந்த வழக்கில் ஏப்ரல் மாதம் சிறைக்கு சென்ற லலன் குமார் அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த லலன் குமாருக்கு நீசிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அது அடுத்த 6 மாதங்களுக்கு கிராமத்தில் இருக்கும் 2 ஆயிரம் பெண்களின் துணிகளை துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டுமென்பதுதான் அது.

கிராமத்தினர் அனைவரும் லலன் குமாருக்கு துணி துவைக்க தேவையான சோப் பவுடர்கள் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். லலன் குமார் ஏற்கெனவே சலவை செய்யும் தொழிலாளியாக இருந்ததால் இது அவருக்கு தெரிந்த பணிதான். ஆனால் இம்முறை இதனை அவர் இலவசமாக செய்ய வேண்டும் என்று மதுபானி மாவட்ட காவல் அதிகாரி சந்தோஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

"இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ந்த உத்தரவு. இந்த உத்தரவால் கிராமத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த உத்தரவால் கிராமத்தின் பெருமையும், பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்" என்று கிராம தலைவர் நசிமா கத்தூன் தெரிவித்துள்ளார்.