மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய கணவன், கிராமத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிஷார் குரேஷி. இவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஃப்சாரி (35) என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சொந்த ஊரில் இருந்த மனைவியை பார்க்க குரேஷி கடந்த புதன்கிழமை வந்தார்.
அப்போது மனைவி மற்றும் மனைவி குடும்பத்தினருக்கும் குரேஷிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த குரேஷி, அங்கு கிடந்த கோடாரியால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மனைவி. பின்னர் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரியையும் தாக்கிவிட்டு குரேஷி, தப்பினார்.
அதற்குள் இந்தச் சம்பவம் ஊர்க்காரர்களுக்குப் பரவியது. ஒன்று திரண்ட அவர்கள், குரேஷியை விரட்டிப் பிடித்து தாக்கினர். இதில் குரேஷி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குரேஷியை தாக்கிக் கொன்றதாக சிலரை கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று பதேபூர் எஸ்.பி, பிரசாந்த் வர்மா தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் நேற்றுதான் வெளியே தெரிய வந்துள்ளது.