இந்தியா

உ.பி: வரதட்சணை கொடுமையால் வீட்டைவிட்டு சென்ற பெண் - ஏமாற்றி கொலைசெய்த கணவர்

உ.பி: வரதட்சணை கொடுமையால் வீட்டைவிட்டு சென்ற பெண் - ஏமாற்றி கொலைசெய்த கணவர்

Sinekadhara

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கொடுமையால் வீட்டை விட்டு சென்ற மனைவியை பணம் தருவதாகக் கூறி கழுத்தை நெரித்து கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் நாசிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் லால். இவருக்கும் ஹிமாச்சல் பிரதேசம் ஹமிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த கான்சன் என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

திருமணமானதிலிருந்தே கான்சனுக்கும் கணவர் குடும்பத்தினருக்கும் இடையே வரதட்சணை காரணமாக அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 4ஆம் தேதி கான்சன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பிப்ரவரி 2ஆம் தேதி கான்சன் திடீரென காணாமல் போய்விட்டதாக அவருடைய பெற்றோர் புகார் கொடுத்திருக்கின்றர். அவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்காததால் ஹமிர்பூர் எஸ்.பி நரேந்திர குமார் சிங்கிடம் சென்ற கான்சனின் பெற்றோர் தனது மருமகன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

சந்தேகத்தின்பேரில் லாலை அழைத்து போலீஸார் அவரிடம் விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில் லால்தான் தனது மனைவியை கொன்றதாக ஒத்துக்கொண்டுள்ளார். செல்போனில் தன்னுடைய மனைவியை தொடர்புகொண்ட லால், அவரிடம் தான் பணம் கொடுக்க ஹமிர்பூர் டவுனுக்கு வந்துள்ளதாக கூறி அழைத்திருக்கிறார். அங்கிருந்து அருகிலிருந்த வயலுக்கு கான்சனை அழைத்துச்சென்று, அவருடன் உடலுறவு வைத்துவிட்டு, பின்பு கான்சனின் துப்பட்டாவால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். கான்சனின் செல்போனை ஆற்றில் வீசிவிட்டு, உடலை வயலுக்கு அருகேயிருந்த புதரில் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

லால் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை கான்சனின் உடலை போலீஸார் கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தனது சொந்த மனைவியையே கொலைசெய்த குற்றத்திற்காக லாலை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.