மளிகை சாமான் வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவியை, முத்தலாக் கூறி கணவர் விவகாரத்து செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள நஸியாபதி பகுதியை சேர்ந்தவர் ஜைனாப் (30). இவர் கணவர் சபீர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. ஜைனாப் கடந்த சனிக்கிழமை, தனது கணவரிடம் மளிகை சாமான் வாங்க 30 ரூபாய் கேட்டார். கடுப்பான அவர் கணவர், மனைவியை தாக்கினார். பின்னர் அந்த நொடியே, தலாக் தலாக் தலாக் என மூன்று முறை சத்தமாகக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித் தார். இதுபற்றி தன் தந்தையிடம் தெரிவித்தார் ஜைனாப். அவர் கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுபற்றி அந்த பெண்ணின் தந்தை கூறும்போது, ‘’ திருமணம் செய்துகொடுத்ததில் இருந்தே, சபீர் வீட்டில் வரதட்சணை கேட்டு வந்தனர். திடீர் திடீர் என்று என் மகளை தாக்குவார்கள். பிரச்னை என்று கேள்விபட்டுச் சென்றால், உடனடியாக மன்னிப்புக் கேட்பார் சபீர். இப்போதும் அப்படித் தான் என்று நினைத்துச் சென்றேன். என் மகளை கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார். நான் போய் தடுத்து, மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தேன். பிறகு முத்தலாக் கூறிவிட்டு, விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இதனால் போலீசில் புகார் செய்திருக்கிறேன்’’ என்றார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘’கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. அப்பா வீட்டுக்கு அடிக்கடி சென்றுவிடுவாராம் ஜைனப். இப்போதும் சென்று வந்த அவருக்கும் கணவர் சபீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தாக்கிய சபீர், முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.