இமாச்சலப் பிரதேசத்தின் மிக அதிகமான குளிர் காரணமாக, குலு பகுதியைச் சேர்ந்த ஒருவர் குளிரில் உறைந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் குளிர் பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழே சென்றுள்ள சூழலில், குலு மாவட்டத்தில் 60 வயது நபர் ஒருவர் குளிரில் உறைந்து இறந்தார். அந்த நபர் பிப்ரவரி 3 ம் தேதி தனது வீட்டை விட்டு வெளியேறினார், ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரைத் தேடி வந்தனர். அவர் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி உறைந்த நிலையில் இறந்து கிடந்தார். "இறந்த உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினருக்குத் திருப்பித் தரப்படும்" என்று போலீஸ் தெரிவித்தது.
வடக்கு மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
சிம்லா வியாழக்கிழமை 50 செ.மீ பனிப்பொழிவைப் பெற்றது, இது கடந்த 30 ஆண்டுகளில் ஒரு நாளில் இரண்டாவது அதிகபட்ச பனிப்பொழிவு ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது என்று சிம்லா வானிலை மைய இயக்குனர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இமாச்சலின் கீலாங் பகுதியில் மைனஸ் 13.7 டிகிரி செல்சியஸும், கல்பாவில் மைனஸ் 6 டிகிரியும், மணாலி மற்றும் குஃப்ரி ஆகிய பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே மைனஸ் 2.4 மற்றும் மைனஸ் 0.7 டிகிரி செல்சியஸில் அமைந்ததாக சிங் தெரிவித்தார்.