இந்தியா

‘மேன் ஈட்டர்’ ஆவ்னி புலி சுட்டுக்கொலை

‘மேன் ஈட்டர்’ ஆவ்னி புலி சுட்டுக்கொலை

webteam

மேன் ஈட்டராக அறிவிக்கப்பட்ட ஆவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் யவாட்மால் மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதி பந்தர்காவாடா. அங்கு வனத்துறையினரால் ஆவ்னி என பெயரிடப்பட்டுள்ள பெண் புலி அண்மையில் மேன் ஈட்டராக மாறி, 13 பேரை கொன்று தின்றதாக கூறப்படுகிறது. பொதுவாக "மேன் ஈட்டராக" மாறும் புலியை வனத்துறையினர் என்கவுண்ட்டர் செய்து கொல்வார்கள். தமிழகத்தில் 2014, 2015, 2016 ஆம் ஆண்டில் மேன் ஈட்டராக அறியப்பட்ட புலிகள் நீலகிரி மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த மேன் ஈட்டர் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது இத்தகைய நடவடிக்கையில் இறங்குகிறது வனத்துறை. அதேபோல் மகராஷ்டிராவில் மேன் ஈட்டராக கருதப்படும் ஆவ்னி என்ற பெண் புலியை என்கவுண்ட்டர் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

ஆவ்னியுடன் அதன் இரண்டு குட்டிகளும் இருப்பதால் அதையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தாய் புலி மேன் ஈட்டராக மாறியதையடுத்து, குட்டியும் மேன் ஈட்டராக இருக்கும் வாய்ப்பே அதிகம் என்பதால் இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் வனத்துறையினரின் இந்த முடிவுக்கு அம்மாநில வன உயிரின ஆர்வலர்களும், பொது மக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் இறங்கிய சமூக ஆர்வலர்களும், வன உயிரின ஆர்வலர்களும் #SaveAvni #LetAvniLive என்ற ஹாஷ்டாக்குகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் ஆவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி மேன் ஈட்டராக அறிவிக்கப்பட்ட ஆவ்னி புலி நேற்று இரவு யாவத்மாவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு குட்டிகள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

ஆவ்னி புலி கொல்லப்பட்டது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரின் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''இது மிகப்பெரிய சோகம். தேசிய விலங்கான புலிகளை கொல்வது வெட்கக்கேடானது. ஆவ்னியின் குட்டிகளை காப்பாற்ற சமூக ஆர்வலர்களும், உயிரின ஆர்வலர்களும் குரல் கொடுக்க வேண்டும். தயவுசெய்து பணத்திற்காக புலிகளை கொல்வதை நிறுத்துங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.