இந்தியா

`என் கூட ஓடிவரமாட்ட....’- வளர்ப்பு நாயை பைக்கின் பின் கட்டி சாலையில் இழுத்துச்சென்ற நபர்

`என் கூட ஓடிவரமாட்ட....’- வளர்ப்பு நாயை பைக்கின் பின் கட்டி சாலையில் இழுத்துச்சென்ற நபர்

webteam

பீகாரில் ஒருவர், தன்னுடைய நாயை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம்தான் ஹைதராபாத்தில் உணவு டெலிவரி செய்யச் சென்ற இளைஞர் ஒருவரை, வீட்டு நாயொன்று துரத்தியதில் பயந்துபோய் 3வது மாடியில் இருந்து அவர் குதித்தார். அதில் காயமுற்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி இறந்தார். இந்தச் செய்தி அடங்குவதற்குள்ளே நாயைப் பற்றி சில செய்திகள் அடுத்த இரண்டு நாட்களில் வைரலாகின.

மற்றொரு இடமான ஹரியானா மாநிலத்தில் தன் மகனைக் கடித்த நாயை தந்தையொருவர் கொன்று புதைத்த சம்பவமும், சண்டிகர் மாநிலத்தில் தெரு நாய்களுக்கு உணவு வைத்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை, காரால் மோதிவிட்டுச் சென்ற சம்பவமும் நிகழ்ந்திருந்தன. நாய்களால் ஏற்படும் அசம்பாவிதங்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், நாயொன்று பீகாரில் வண்டியில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அச்செய்தியின்படி பீகார் மாநிலம் கயாவில் தனது வீட்டு நாயை மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு கிமீ தூரம் ஒருவர் இழுத்துச் சென்ற வீடியோ, பார்ப்போரைப் பதைபதைப்புக்குள்ளாகி இருக்கிறது. அந்த நாய், தன்னுடன் ஓடி வரவில்லை என்பதற்காக, நாயின் கழுத்தில் இருந்த செயினை பைக்கில் கட்டி 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றுள்ளார் அதை பராமரித்து வந்தவர் என சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், விலங்குகள் நல அமைப்புக்கும் தெரியப்படுத்தியுள்ளார். அதன்பேரில், நாயை இழுத்துச் சென்றவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையினர், “சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த வீடியோவை நாங்கள் பார்த்தோம். விசாரணையில், அது உண்மை என தெரியவந்துள்ளது.

அதன்படி, அந்த நபர் மீது விலங்கு வதை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்க முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்