நபர் உயிரிழப்பு காட்சிகள்
நபர் உயிரிழப்பு காட்சிகள் twitter page
இந்தியா

திருமண மேடையில் நடனமாடிய நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சி வீடியோ!

Prakash J

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தும்போது எதிர்பாராதவிதமாகத் திடீரென கீழே விழுந்து உயிரிழக்கும் செய்திகள்தான் அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பலோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் ரெளஜ்கர். மின் பொறியாளரான இவர், கடந்த 5ஆம் தேதி, ராஜ்நந்கான் மாவட்டத்தில் உள்ள டோன்கர்கர் என்ற பகுதியில் நடைபெற்ற தனது மருமகளின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது அங்கு சிலர் நடனமாடி உள்ளனர். இதைப் பார்த்து உற்சாகம் அடைந்த திலீப்பும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி உள்ளார்.

மிகவும் உற்சாகமாய் நடனமாடிய அவர், திடீரென மேடையின் ஓரத்தில் கீழே அமர்ந்தார். பின்னர், அடுத்த சில வினாடிகளில் மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

திலீப்பின் சக பணியாளர், “அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஜாலியாகப் பேசி சிரிக்க வைப்பார். திருமண நிகழ்வு அன்று முழு உற்சாகத்துடன் நடனமாடினார். மேடையில் பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடியபோதுதான் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அந்த நபர் மேடையில் நடனமாடுவதும், அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுவதுமான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து மருத்துவர் தரேஷ் ராவ்தே, ”நம் உடலில் சேரும் கொழுப்புகள் இதயத்திற்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது. இதனால் திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. மக்கள் அடிக்கடி வழக்கமான உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதேபோன்று, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், ஜம்முவில் பார்வதி அவதாரத்தில் நடனம் ஆடிக்கொண்டிருந்த 21 வயது இளைஞரும், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி ஹைதராபாத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 24 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், பிப்ரவரி 26ஆம் தேதி, தெலுங்கானாவில் நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய 19 வயது இளைஞர் ஒருவரும், பிப்ரவரி 28ஆம் தேதி, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வீரர் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், கடந்த மார்ச் மாதம் கலைநிகழ்ச்சியில் பங்கேற்று நடித்த ஒருவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.