கார்த்திக் fb
இந்தியா

பந்தயம் கட்டி மது அருந்திய 21 வயது இளைஞர்; நிற்கதியாய் நிற்கும் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை!

பந்தயத்தால் உயிரிழந்த இளைஞர்: சோகத்தில் இளைஞரின் குடும்பம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடகாவில் நண்பர்களுடன் பந்தயம் கட்டி மது அருந்திய 21 வயது இளைஞர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் 2.6 மில்லியன் மக்கள் மது அருந்தி உயிரிழக்கிறார்கள். அந்தவகையில், கர்நாடகாவில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் பூஜாரஹள்ளியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், எட்டு நாட்களுக்கு முன்பாக குழந்தையும் பிறந்துள்ளது.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போதுதான், இவரது நண்பர்கள் சிலர் ஸ்வாரஸ்யத்திற்காக, விஷப்பரிசை ஒன்றை அரங்கேற்ற முற்பட்டுள்ளனர்.

அதன்படி, மதுவில் தண்ணீர் கலக்காமல் 5 பாட்டில்கள் அப்படியே அருந்தினால் பத்தாயிரம் ரூபாய் தருவதாக, கர்த்திக்கின் நண்பர் வெங்கடரெட்டி பந்தயம் வைத்துள்ளார்.

இந்த சவாலை ஏற்ற கார்த்திக், அவர் கூறியதை போலவே, தண்ணீர் சேர்க்காமல், மது அருந்தி, பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அளவின்றி மீறி மது குடித்த கார்த்திக்கின் உடல்நலம் பாதிப்படைய துவங்கியுள்ள்ளது. இதனால், சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். பதறிப் போன கார்த்திக்கின் நண்பர்கள், கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகலில், ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் குறித்து முல்பாகல் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பந்தயத்திற்கு அழைத்த வெங்கடரெட்டி, சுப்பிரமணி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், மேலும் 4 நண்பர்களை தேடி வருகின்றனர்.

பொறுப்பற்ற குடிப்பழக்கத்தின் உச்சத்தால் ஏற்பட்ட இந்த ஆபத்து கார்த்திக்கின் குடும்பத்தை தற்போது நிற்கதியாக நிற்க வைத்துள்ளது. உலகில் பல குடும்பங்களின் நிலையும் இப்படியாகத்தான் இருக்கிறது.