எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை. தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஸ்ரப் ராஸா கான். இவர் மகள் குல்பாஷா பீ. வயது 22. குல்பாஷா பீ, அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரைக் காதலித்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார் குல்பாஷா பீ. அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.
திருமணத்துக்கு பிறகு தனது தந்தை வீட்டுக்கு குல்பாஷா பீ செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்கு ராஸா கான் வந்தார். அப்பா திடீரென்று வந்ததால் பதற்றமடைந்து உட்கார்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்தார். ஆனால், அவருடன் வந்திருந்த உறவினர்கள், குழந்தையை அவரிடமிருந்து பிரித்தனர். பின்னர் கட்டிலோடு சேர்த்து குல்பாஷாவை கட்டினர். கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை அவர் மீது ஊற்றினர். தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார் குல்பாஷா. ஆனால், அவர்கள் இரக்கமின்றி தீயை வைத்துவிட்டு ஓடிவிட்டனர். மண் எண்ணெய் ஊற்றப்பட்டதால் தீ குப்பென்று பற்றிக்கொண்டது. கதறிய குல்பாஷாவின் சத்தம் சிறிது நேரத்தில் அடங்கிவிட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எரிந்து கரி கட்டையானார் குல்பாஷா பீ.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.