ஹரியானாவில் 6 பேரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நடைப்பெற்ற கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை 6 நபர்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பல்வால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற படுகொலை சம்பவம் பதிவாகியது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கொலையாளி குறித்த தகவல்களை சேகரித்தனர்.
இதற்கிடையில் பல்வால் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து காவலர்கள் அங்கு விரைந்தனர். அங்கு இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்த காவல்துறையினர் கொலையாளி குறித்த தகவல்களை சேகரித்தனர். அதில் நீல நிற மேல்சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த ஒரு நபர் கையில் இரும்பு கம்பியுடன் சுற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தனர். கைது செய்ய முற்படும் போது அந்த நபர் காவல்துறையினரையும் தாக்கியுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நபர் முதலில் ஆக்ரா மற்றும் மைனர் கேட் பகுதியில் 4 பேரை கடுமையாக தாக்கி படுகொலை செய்ததாக தெரிவித்தார். அடுத்து ஒரு செக்யூரிட்டியை கொலை செய்துள்ளான். அடுத்து பல்வால் மருத்துவமனைக்கு வந்து ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.