முதுகு வலியால் விடுப்பு கேட்டு மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களிலேயே, 40 வயது ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், முதுகு வலியால் விடுப்பு கேட்டு மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களிலேயே, 40 வயது ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஊழியர், காலை 8.37க்கு தனது மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “கடுமையான முதுகு வலி காரணமாக இன்று அலுவலகம் வர இயலவில்லை” என்று தெரிவித்துள்ளார். அதற்கு மேலாளர், “சரி, ஓய்வெடுங்கள்” என்று பதிலளித்துள்ளார். சரியாக 10 நிமிடங்களில், அந்த ஊழியர் மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, புகை மற்றும் மதுப் பழக்கங்கள் இல்லாத ஒருவருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது, தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உடல்நலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்துகிறது.