மொபைல் எண் சேவையை துண்டித்தாலும், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணுடன் மத்திய அரசு வழங்கியுள்ள ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக அனைத்து மொபைல் நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வழியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், ”என்னுடைய மொபைல் எண் சேவையை துண்டித்தாலும் பரவாயில்லை நான் கட்டாயமாக மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும் இது போன்று வற்புறுத்தப்படுவது தனி நபர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அதே போல் பொதுமக்கள் யாரும் இது போன்று ஆதார் எண்ணை இணைக்காதீர்கள் என்றும் இவ்வாறு இணைத்தால் கணவன்- மனைவியிடையே நடைபெறும் உரையாடல் உட்பட அனைத்து தகவல்களும் வெளியில் கசிய வாய்ப்புண்டு என்று மம்தா தெரிவித்துள்ளார்.