இந்தியா

ஆக்சிஜன் உற்பத்திக்கு உடனடியாக நிதி ஒதுக்க பிரதமருக்கு மம்தா கடிதம்

நிவேதா ஜெகராஜா

மேற்கு வங்கத்தில் தேர்தல் சலசலப்புகள் ஓரளவு ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில், கொரோனா மீதான மாநில அரசின் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, தங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது எனக்கூறி, அதை உற்பத்தி செய்யும் கருவிகளை வழங்குமாறு அம்மாநில முதல்வர் மம்தா, பிரதமர் மோடிக்கு கடிதம் வழியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுபற்றி அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், இவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்திக்கூடங்களை (பி.எஸ்.ஏ.) அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அவர். பி.எம். கேர்ஸ் மூலம் இந்த நிதியை ஒதுக்குமாறு கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரலில், 70 பி.எஸ்.ஏ. உற்பத்திக்கூடங்கள் அமைக்கப்பட மத்திய அரசு நிதி அளிப்பதாக கூறியிருந்தது. அதில் 4 மட்டுமே இப்போது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை குறிப்பிட்டு, மீதமுள்ளவை எப்போது அளிக்கப்படும் என்று தெரியவில்லை என்பதை தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மம்தா.

'விரைவில் அவற்றை வழங்கவேண்டும். மத்திய அரசின் இந்த நிலையற்ற தன்மை காரணமாக, மாநிலத்தில் சொந்தமாக ஆக்சிஜன் உருவாக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய இது தொடர்பான முன்னுரிமைகள், செயல்படுத்தும் முகமைகள், ஒதுக்கீட்டு அளவில் நேர்மை, நியாயம், வேகம் வேண்டும்' என்று கூறியுள்ளார் மம்தா.

மேற்கு வங்கத்தில், தினமும் 20,000 த்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுவருவதால், படுக்கை தொடர்பான பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையை மாநிலத்துக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக மம்தா இக்கடிதத்தை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.