mamata
mamata pt web
இந்தியா

“Handbrake போடப்பட்டதால் மட்டுமே உயிர்பிழைத்தேன்” - விபத்து குறித்து மம்தா

Angeshwar G

நேற்று கொல்கத்தாவில் இருந்து 102 கிமீ தொலைவில் உள்ள புர்பா பர்தமான் என்ற இடத்தில் நிர்வாக மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்றிருந்தார். அப்போது பர்தவானில் இருந்து கொல்கத்தாவிற்கு சாலை மார்க்கமாக அவர் சென்று கொண்டிருந்த போது முதலமைச்சரின் கார் விபத்திற்குள்ளானது. விபத்தின்போது மம்தா, டிரைவரின் அருகில் உள்ள முன்இருக்கையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தாவின் கான்வாய் முன்பு திடீரென மற்றொரு கார் வந்ததால், அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போடப்பட்டுள்ளது. இதில் மம்தா காரின் கண்ணாடியில் மோதியுள்ளார். இதன் காரணமாக அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மம்தா கொல்கத்தாவிற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் புறப்பட முடியாமல் காரில் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது மேற்குவங்கம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மேற்குவங்க மாநிலத்தில் ஆளுநர் சி.வி. ஆனந்த போசை சந்தித்த பின்னர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு பேண்டேஜ் அணிந்திருந்த அவர், தமக்கு நேர்ந்த கார் விபத்து குறித்து விவரித்தார்.

மம்தா பானர்ஜி

அப்போது பேசிய அவர், “நாங்கள் சென்று கொண்டிருந்தபோது எதிர்புறமாக வந்த கார் ஒன்று எங்கள் கார் மீது மோத முற்பட்டது. எனது காரின் ஓட்டுநர் ஹேண்ட்ப்ரேக்கை சரியாக அழுத்தியதால் நான் உயிர்பிழைத்துள்ளேன். திடீரென ப்ரேக் போடப்பட்டதால் டேஷ்போர்டில் மோதி சிறிது காயம் அடைந்தேன். மக்களின் ஆசியால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்” என தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “கூட்டம் நடந்த இடத்தைவிட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே கார் ஒன்று கான்வாய்க்குள் வழிதவறி சென்றது. இதனால் காரின் ஓட்டுநர் திடீரென பிரேக்கை பயன்படுத்த வேண்டி இருந்தது. மம்தா எப்போதும் முன் இருக்கையில் அமர்ந்திருப்பதால் அவர் முன்னோக்கி தூக்கி எறியப்பட்டார். இதனால் அவரது தலை கண்ணாடியில் மோதியது” என தெரிவித்துள்ளார்.