தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த மாநிலங்கள் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான 2 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. ஏற்கனவே, பிகாரில் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டபோது, 65 லட்சத்திற்கும் மேற்பட்ட அம்மாநில வாக்களர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு, இண்டியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரண்டாம் கட்ட எஸ்.ஐ.ஆர் அறிவிப்பு மேலும், கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. ஆனாலும், எஸ்.ஐ.ஆர் பணிகளை முடித்த தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களையும், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களையும் என 12 மாநிலங்களில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கியிருந்தது.
இந்த நிலையில் தான், மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு நேற்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும், இந்த வழக்கில் மனுதாரர் மம்தா பானர்ஜி தானே வாதாட அனுமதி பெற்றிருந்த நிலையில், தனது வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனது மனுவிற்காக நேரில் ஆஜராவது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கியத்துவத்தைப் பெற்றது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கறுப்பு அங்கியுடன் ஆஜரான மம்தா தலைமை நீதிபதி அமர்வு முன் பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தை குறிவைக்கிறது எனவும் எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமாக பி.எல்.ஓ-க்கள் கடிதங்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் துன்புறுத்தல் காரணமாக பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர் பணிகளை 2 மாதங்களில் முடிக்க ஏன் அவசரம் காட்ட வேண்டும். மேற்கு வங்கத்தில் பயன்படுத்திய அளவுகோல் ஏன் அசாமில் பயன்படுத்தவில்லை. மேற்கு வங்க மக்கள் புல்டோசர்களால் ஒடுக்கப்படுகின்றனர் எனவும் வாதாடினார்.
தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் கேள்விகளுக்கு, பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.