2011 முதல், திரிணாமூல் காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் பவானிபூர் தொகுதி, 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், ஒரு கடுமையான போர்க்களமாக மாறியுள்ளது. இதற்கு, இடது முன்னணியின் விரைவான சரிவும், மம்தாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த கட்சி மாறிய சுவேந்து அதிகாரியுமே முக்கியக் காரணம்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளை உடைய மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க திரிணாமுல் காங்கிரஸுக்கும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது பவானிபூர் தொகுதி. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படுபவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். கொல்கத்தா மாநகரத்தின் தெற்குப் பகுதியான பவானிபூரில் மம்தா தொடர்ச்சியாக 3 முறை வென்ற நிலையில், 4ஆம் முறையாக போட்டியிடுகிறார். பவானிபூரை தக்கவைத்துக்கொள்வதை கவுரவ பிரச்னையாக பார்க்கிறார் மம்தா பானர்ஜி.
ஆனால், மம்தாவை அவரது கோட்டையில் வீழ்த்தியே தீரவேண்டும் என்ற முனைப்பில் உள்ளது பாஜக. கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோற்றிருந்தார். இந்தச் சூழலில் பவானிபூரில் வென்ற திரிணமூல் வேட்பாளர் ராஜிநாமா செய்த நிலையில், அங்கு நடந்த இடைத்தேர்தலில் நின்று மம்தா 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். இந்த நிலையில்தான், சுவேந்து அதிகாரி இம்முறை நந்திகிராமில் மட்டுமல்லாமல் பவானிபூரிலும் போட்டியிட்டு மம்தாவிற்கு சவால் தருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் இச்சட்டமன்றத் தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகளை மட்டுமே திரிணமூல் கூடுதலாக வென்றிருந்தது. மம்தாவிற்கு எதிராக சுவேந்துவை களமிறக்கிய பாஜகவின் இந்த நகர்வு யுக்தி ரீதியாகவும் கவனம் பெறுகிறது.
கொல்கத்தா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு நகரத்தில், பவானிபூர் எனும் சிறிய தொகுதி தனித்து நிற்கிறது. இந்த தொகுதி 'மினி-பாரத்' என்று அழைக்கப்படுகிறது. இத்தொகுதியில்தான் கொல்கத்தா மாநகராட்சியின் எட்டு வார்டுகள் உள்ளன. இங்கு வங்காள இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ராஜஸ்தான், குஜராத், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த வாக்காளர்களும் உள்ளனர். 2011 முதல், திரிணாமூல் காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் இந்த தொகுதி, 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், ஒரு கடுமையான போர்க்களமாக மாறியுள்ளது. இதற்கு, இடது முன்னணியின் விரைவான சரிவும், மம்தாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த கட்சி மாறிய சுவேந்து அதிகாரியுமே முக்கியக் காரணம்.
மேலும், பவானிபூர் தொகுதியின் வாக்காளர்களில் கணிசமான பகுதியினராக உள்ள, பாரம்பரியமாக காவி கட்சிக்கு ஆதரவாக இருக்கும் வங்காளம் பேசும் இந்துக்கள் மற்றும் வங்காளம் அல்லாத இந்துக்களையும் பாஜக குறிவைத்துள்ளது. இன்னொரு புறம் 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் கொல்கத்தா தக்ஷின் மக்களவைத் தொகுதியில் உள்ள பவானிபூரில் பாஜக கணிசமாக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது மம்தாவா.. சுவேந்தா என்பதைக் காட்டிலும், பவானிபூரில் வெல்லப்போவது பாஜகவா, மம்தாவா என்ற போட்டியே தற்போது அங்கு அதிகம் உருவெடுத்துள்ளது. அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.