இந்தியா

ஜே.என்.யூ மாணவர்கள் மீது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல் : மம்தா பானர்ஜி

webteam

டெல்லி ஜே.என்.யூவில் நடந்தது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள ஜே.என்.யூ வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ஜே.என்.யூவில் நடந்தது திட்டமிட்ட பாசிச சர்ஜிக்கல் தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மத்திய அரசின் கீழ் செயல்படுகின்றனர். ஒரு பக்கம் பாஜக குண்டர்களை அனுப்புகின்றனர். மறுபக்கம் போலீசை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். உயர் அதிகாரிகள் உத்தரவால் போலீஸ் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றனர். மத்திய அரசுக்கு எதிராக பேசினால் பாகிஸ்தானியர்கள் அல்லது நாட்டின் எதிரி என்று முத்திரை குத்துகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.