மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

”வங்கதேச ஊடுருவலுக்கு எல்லை பாதுகாப்பு படையே காரணம்” | மம்தா கடுமையான குற்றச்சாட்டு; பதிலளித்த பாஜக!

”மேற்கு வங்க மாநிலத்தை சீர்குலைக்க ஊடுருவல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அனுமதிக்கிறது” என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அண்டை நாடான வங்கதேசத்தில் இருக்கும் மக்கள் இம்மாநிலத்தில் அதிகளவில் ஊடுருவி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, அங்கு இடைக்கால ஆட்சி அமைந்துள்ளது.

எனினும், அந்நாட்டில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல் அரங்கேறி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க அவர்கள் இந்தியாவுக்கு குடியேறி வருகின்றனர். குறிப்பாக, வங்கதேசத்தில் காணப்படும் கலவர சூழல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக கடந்த 5 மாதங்களாகவே சட்டவிரோதமாக மாநில எல்லைகளில் நுழைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு மேற்கு வங்க அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தது.

மம்தா பானர்ஜி

இதற்குப் பதிலளித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்கத்தின் இஸ்லாம்பூர், சிதாய், சோப்ரா உள்ளிட்ட சில எல்லையோரப் பகுதிகள் வழியாக, வங்கதேச நாட்டவரை ஊடுருவ எல்லைப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கின்றனர். இதுதொடர்பான உறுதியான தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. மாநிலத்தைச் சீர்குலைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கை இருக்குமோ என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றுகிறது.

எல்லைப் பகுதியில் வங்கதேச மக்களை ஊடுருவுவதற்கு அனுமதிப்பதோடு, ஏராளமான மக்களை பிஎஸ்எஃப் படையினர் சித்திரவதை செய்வதாகவும் தகவல் வந்துள்ளது. வங்கதேச குண்டர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். எல்லையின் 2 பக்கங்களிலும் அமைதி நிலவவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் ஊடுருவுவதைத் தடுக்குமாறு மாநில போலீஸ் டிஜிபி ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், ”அவர், இப்போது, ​​அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாண்டி, தனது சொந்த நிர்வாகத்தின் அதிகாரிகளை குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளார். அவரது கருத்துப்படி, அவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள திறமையற்ற மாவட்ட நீதிபதிகள் (டிஎம்கள்) மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் (எஸ்பிக்கள்) தனது கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொலை செய்ய வெளிநாட்டு குற்றவாளிகளை எல்லைக்குள் ஊடுருவ அனுமதிக்கின்றனர். அவர் மாயையின் உச்ச நிலையை அடைந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மத்திய அரசு வேண்டுமென்றே வங்கதேச எல்லையில் ஊடுருவ அனுமதிக்கிறதா அல்லது எல்லையை பாதுகாக்க பாஜக அரசு தவறுகிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.