மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற நக்சலைட் பாதிப்பு தொடர்பான கூட்டத்தை மம்தா பானர்ஜி, சந்திர சேகர் ராவ் புறக்கணித்துள்ளனர்.
நக்சலைட் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, நக்சலைட் பாதிப்புள்ள சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்குவங்காளம், பீகார், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்திருந்தார்.
உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் அவர் இத்தகைய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நக்சலைட் பாதிப்புகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி நடவடிக்கை குறித்தும் அமித்ஷா கேட்டறிந்தார்.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக அம்மாநில தலைமைச் செயலர்களை இருவரும் அனுப்பி வைத்துள்ளனர். இதில், மம்தா பாஜக அரசுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்து வருபவர். கேசிஆர் உள்ளூர் பயணத்தில்தான் இருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க பாஜகவின் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸும் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவில் வரவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி சுற்றுப் பயணத்தில் உள்ளார்.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 2009-13 ஆண்டுகளில் 8,782 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் 43.4 சதவீதம் குறைந்து 2014-18 ஆண்டுகளில் 4,969 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2009-13 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் உட்பட 3,326 பேர் நக்சலைட் பாதிப்பு பகுதிகளில் கொல்லப்பட்டிருந்த நிலையில், 2014-18 ஆம் ஆண்டுகளில் 1,321 ஆக குறைந்துள்ளது.