ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து தகவல்களை திருடும் ‘பிளாக்ராக்’ என்ற வைரஸ் பரவி வருவதாக மத்திய அமைச்சர் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இத்தகவலை தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, இது குறித்து பொது மக்களுக்கு ஏற்கெனவே எச்சரித்துள்ளதாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கடந்த ஜூலையில் ஆண்ட்ராய்டு போன்களில் இருந்து தகவல்களை திருடும் பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக இந்திய கணினி அவசர தீர்வு மையம் எச்சரித்திருந்தது. இந்த வைரஸ் அலைபேசிகளில் மின்னஞ்சல், வங்கிச் சேவை, ஊடகம் தகவல் பரிவர்த்தனை மின்னணு வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான 300க்கும் அதிகமான செயலிகளில் நுழைந்து தகவல்களை திருடும் ஆற்றல் கொண்டது.
இதையடுத்து மத்திய அரசின் 'சைபர் ஸ்வச்தா கேந்திரா' அமைப்பின் மூலம் இணைய சேவை நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையின் கூட்டுடன் பிளாக்ராக் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் தகவல் திருடும் செயலிகள் வைரஸ்கள் தொடர்பான விழிப்புணர்வையும்ஏற்படுத்தி வருகிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.