ஊழல் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பிரதமர் மோடி கட்டாய விடுப்பில் அனுப்பியது சட்டவிரோதம் எனவும் இது சிபிஐ சட்டவிதியை மீறுவதாக உள்ளது எனவும் காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத்துறையில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட சிபிஐ இயக்குநர் அலோக்வர்மா ரஃபேல் ஒப்பந்தம், இந்திய மருத்துவ கவுன்சிலின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்பான லஞ்ச புகார் வழக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை கவனித்து வந்தார்.
இந்நிலையில், அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குநர் ராஜேஷ் அஸ்தனாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களை கூறி குற்றம் சாட்டி வந்தனர்.
இதனால் மத்திய அரசு இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லும்படி உத்தரவிட்டது. தற்போது, தற்காலிக இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார். ரஃபேல் ஒப்பந்தம் சம்பந்தமான ஊழல் வெளிவரும் என்பதற்காகவே அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஊழல் புகாரில் சிக்கிய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை பிரதமர் மோடி கட்டாய விடுப்பில் அனுப்பியது சட்டவிரோதம் எனவும் இது சிபிஐ சட்டவிதியை மீறுவதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், சிபிஐ இயக்குனர் நியமனம் அல்லது நீக்கம் குறித்து பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி கொண்ட மூன்று பேர் குழுவே முடிவெடுக்க முடியும் எனவும் ஆனால் என்னை கலந்தாலோசிக்காமல் பிரதமர் நேரடியாக தலையிடுவது சட்ட விரோதம் எனவும் தெரிவித்துள்ளார்.